ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

ஜோதிடத்தில் 12ம் வீடு — ஆசையற்ற முக்தியின் அடையாளம்

ஜோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளில், லக்னம் என்பது பிறப்பின் தொடக்கம்;
12ம் வீடு பிறப்பின் முடிவாகக் கருதப்படுகிறது.
லக்னம் ஆசைகளின் ஆரம்பம்;
12ம் வீடு ஆசைகளற்ற நிலையினை அடையும் முக்தியைச் சுட்டுகிறது.

இப்பதிவில் 12ம் வீட்டினைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

12ம் வீடு – எல்லையின் முடிவு

12ம் வீடு வாழ்க்கையின் கடைசி எல்லையைக் குறிக்கிறது.
பிறந்த உடன் வாழ்க்கை எனும் ஓட்டத்தில் நாம் பயணிக்கத் தொடங்குகிறோம்.
“இனி ஓடுவதற்கு பாதைகள் இல்லை, முடிவை எட்டிவிட்டோம்” என்று சொல்வதற்குரிய இடமே 12ம் வீடு.
எனவே இதனை ஆசையற்ற முக்தி ஸ்தானம் என்று அழைக்கிறோம்.

பகலெல்லாம் உழைப்பின் பின் ஓய்வெடுக்கும் சயன ஸ்தானம் இதுவே.
பணத்தினை ஈட்டிவிட்டு செலவு செய்வதை அடையாளம் காட்டும் வீடு இது.
பெற்றதை இழப்பதையும், விரயம் ஏற்படுவதையும் காட்டும் விரய பாவம் இதுவே.
சந்தோஷம் கண்ட பின் துயரம் தரும் நிலைகளையும் குறிக்கிறது.
மற்ற வீடுகள் கொடுத்ததை இழக்கச் செய்யும் முடிவு வீடு இதுவே.

ராசிகளின் அடிப்படை விளக்கம்

மேஷம் வாழ்க்கையின் தொடக்க அடித்தளத்தை குறிக்கிறது.

கடகம் வாழ்க்கையை வாழ்வதற்கான உணர்வைச் சொல்கிறது.

12ம் பாவத்தின் அடிப்படையில் மீனம் மற்றும் மிதுனம் ஆகிய ராசிகள் இயங்குகின்றன.

மீனம் இயற்கையான 12ம் பாவ பலன்களை அளிக்கிறது.
மிதுனம் வாழ்க்கையின் தார்மீக நோக்கங்களின் அடிப்படையில் பலன்களை வழங்குகிறது.
எனவே, “மீனம்–மிதுனம்” என்ற மனச்சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு லக்னத்திற்கும் பலன்களைப் பார்க்க வேண்டும்.

லக்னப்படி 12ம் வீடு விளக்கம்

மேஷ லக்னம்:
12ம் வீடு மீனம்.
மோட்சம் பற்றிய வைராக்கிய சிந்தனை கொண்டவர்கள்.
3ம் வீடு மிதுனம் என்பதால் அறிவாற்றல் கூர்மை.
வருமானத்தையும் செலவையும் நுணுக்கமாக கணக்கிடும் திறமை உடையவர்கள்.

ரிஷப லக்னம்:
12ம் வீடு மேஷம்; மீனம் 11ம் பாவம்.
வாழ்க்கையை லாப நோக்கில் காண்பார்கள்.
மிதுனம் 2ம் வீடாக இருப்பதால் குடும்பம் சார்ந்த விஷயங்களில் ஆழ்ந்த ஈடுபாடு;
அறிவுரைகள் வழங்க விரும்புவார்கள்.

மிதுன லக்னம்:
12ம் வீடு ரிஷபம்; மீனம் 10ம் பாவம்.
வசதிகளைப் பெறுவதற்காக போராடுபவர்கள், வெற்றியும் அடைவார்கள்.
லக்னம் மிதுனம் என்பதால் மோட்ச சிந்தனை எப்போதும் மனத்தில் இருக்கும்,
ஆனால் ஆடம்பர ஆசை விலகாது.

கடக லக்னம்:
12ம் வீடு மிதுனம்; மீனம் 9ம் பாவம்.
திடீர் ஆன்மீக எழுச்சி, இறையருள் வாய்ப்புகள் மிகுந்தவை.
ஆனால் செல்வச் சேர்க்கை பற்றிய ஆசை தணியாது.

சிம்ம லக்னம்:
12ம் வீடு கடகம்; மீனம் 8ம் பாவம்.
மறைபொருள், ரகசிய அறிவு தேடும் ஆர்வம்.
வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்கள்.
உணவு, பயணங்களில் கட்டுப்பாடு குறைவு;
ஆனால் மோட்சத்திற்கான அறிவு ஆழமாக இருக்கும்.

கன்னி லக்னம்:
12ம் வீடு சிம்மம்; மீனம் 7ம் பாவம்.
திருமண வாழ்க்கையில் சிக்கல்கள், மோதல்கள்.
மோட்ச பாதையில் செல்ல முயற்சி இருந்தும் மனதளவில் தடுமாறுவார்கள்.
மிதுனம் 10ம் வீடு என்பதால் உழைப்பும் பண ஆசையும் அதிகம்.

துலா லக்னம்:
12ம் வீடு கன்னி; மீனம் 6ம் பாவம்.
அறிவைப் பெற்றவர்கள், பிறருக்கு போதிப்பதில் ஆர்வம்.
மோட்ச சிந்தனை வருவதும் போவதும் போல.
மிதுனம் 9ம் வீடு என்பதால் செல்வம், சொத்து சேர்க்கையில் ஈடுபாடு.

விருச்சிக லக்னம்:
12ம் வீடு துலாம்; மீனம் 5ம் பாவம்.
அதிர்ஷ்டம் பெரிதும் உதவும்.
பதவி, பரிசு, லாபம் என வெற்றி உறுதி.
மிதுனம் 8ம் வீடு என்பதால் ஆபத்தான நிலைகள் ஏற்படும்;
வாழ்க்கை தத்துவம் இவா்களின் வலிமை.

தனுசு லக்னம்:
12ம் வீடு விருச்சிகம்; மீனம் 4ம் பாவம்.
மோட்சம் எளிதில் அடையக்கூடியவர்கள்.
வசதியான வாழ்க்கையையும் விரும்புவார்கள்.
மிதுனம் 7ம் வீடு என்பதால் “திருமண பந்தம் போதுமா?” என்ற சிந்தனை.
ஆன்மீக யாத்திரை ஆர்வம் மிகுந்தது.

மகர லக்னம்:
12ம் வீடு தனுசு; மீனம் 3ம் பாவம்.
மோட்சம் பற்றிய தீவிர சிந்தனை.
மிதுனம் 6ம் வீடு என்பதால் வாழ்க்கை போராட்டமயமாக இருக்கும்.
நிராசைகள் அவர்களை ஆன்மீகப் பாதைக்கு தள்ளும்;
சிந்தனை சரியான திசையில் சென்றால் முக்தி நிச்சயம்.

கும்ப லக்னம்:
12ம் வீடு மகரம்; மீனம் 2ம் பாவம்.
மோட்சம், பாப–புண்ணியம் பற்றிய நம்பிக்கை.
குடும்ப வாழ்க்கையுடன் ஆன்மீக வாழ்க்கை இணைந்து இருக்கும்.
மிதுனம் 5ம் வீடு என்பதால் திடீர் அதிர்ஷ்டம், வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

மீன லக்னம்:
12ம் வீடு கும்பம்; மீனம் லக்னம்.
பிறப்பின் நோக்கமே மோட்சம்.
ஆனால் பதவி, வசதி ஆசைகள் வழி மறைக்கும்.
மிதுனம் 4ம் வீடு என்பதால் வீடு, வாகனம், சொத்து ஆசைகள் மிகும்;
அவை முக்திப் பாதையில் தடையாகும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *